Sunday, August 19, 2007

வெட்டினோம் சூடடிக்கமுதல் வெளிக்கிட்டோம்......

November 13, 2005
வெட்டினோம் சூடடிக்கமுதல் வெளிக்கிட்டோம்......
வைகாசி மாத்தத்தின் வைகறைப் பொழுததனில்
தையல் முத்தாச்சியின் வாக்குப் பொய்த்துப் போனது.
தென்மரின் ஆட்சி என்றும்வடக்கு போகாது
வருகின்ற வடக்கரை வராதே என்னாது
புண்ணிய பூமியடி அமுத சுரபியடி

மாவும், பிலாவும், பனங்கிழங்கும் ஒடியலும்
தனியப் போதுமடி சீவியம் போகுமடி
பேரப்பிள்ளைகளுக்கு அடித்த பெருமை
'மிக்' கோடும் மல்டியோடும் 'மிக்ஸ்' ஆகிப்போனது.

போட்டது போட்டபடி
தொட்டது விட்டபடி
வெளிக்கிடடி பிள்ளை உயிரிருந்தால்
நாளை உதெல்லாம் வேண்டலாம்
கைகாலில்லட்டி எந்தச்சந்தையில் உன்னைக்
கைபிடிச்சுகுடுப்பன்.

வீடும் வேண்டாம் மாடும் வேண்டாம்
கட்டிலோடு அப்புவை தூக்கி- 'மிசின்'
பெட்டீக்கைவையப்பா
தாட்டதை கிண்டேலாது கண்டியோ,
தட்டுமுட்டு இரண்டுபோதும் கஞ்சிவைக்க
உடுபுடவை ஒண்டெண்டாலும் வேணும்
உறுதிகட்டையும் உரப்பைக்குள் போடு.

பொம்மியும் ஜிம்மியும் என்ன செய்ய
கிழவனுக்கு காவலிருக்கட்டன்
அவிழ்த்து விடு- தாகத்துக்கு பானையில் தண்ணி
பசிச்சா பையில விசுக்கோத்து
கிழவனுக்கு கட்டிலுக்கு- பக்கத்தில

பிள்ளைத்தாச்சிய முன்பக்கம் ஏத்து
பிள்ளையளும் நானும் பின்னால நடக்கிறம்
"பைற்றர்' வந்தால் ஏதும் பத்தையள் பாருங்கோ
அம்மாவையும் 'வீல் சியரையும்' வண்டிலில் ஏத்து
அவாவின் மலச்சட்டி, மருந்தை நான் கொண்டுவாறன்.

பாவி நான் பாருங்கோ
பதட்டத்தில்
படலையைப்பூட்டயில்லை
பதகளிப்பில் பத்துப்பவுண் பதக்கத்தை
பஞ்சுமெத்தைகுள்ள வச்சிட்டன்
பரித்தவித்தாள் பரிமளாக்கா

தொட்டது பாது விட்டது பாதி
தின்றது பாதி மென்றது பாதி
ஓலங்கள் பாதி அவலங்கள் மீதி
முற்றான கலியாணம் முறிந்து போனது
மாப்பிள்ளைக்கு வலக்காலில்லையாம்
சத்தான தோட்டம் துரவு
ரத்தத்தில் சகதியாச்சு
ரத்தம் (Blood meal)கூட நல்ல பசளையாமே

முற்றத்து வேப்பமரம் முறிந்து போனது
முத்தான வியர்வை சேர்த்து
முழுமதியாய் மிளிர்ந்து வந்த
முத்தையரின் மூன்றுமாடி முழங்காலில்லாமல்
முத்ததில் கிடந்தது

கோழிமுட்டைகள் சிதறிபோக
'மிக்' போட்ட முட்டைக்குள் கோழிகள் சிதறிப்போயின.
படமெடுக்கும் குகனண்ணையும் , பக்கத்துவீட்டு ஈஸ்வரனும்
சிவன்கோயில் இடிபாட்டுக்கையாம்- சிவலிங்கத்துக்கு சேதமில்லை.

சாவை நகர் பட்டதுன்பம் கேளீர்-கேட்கவும் பார்க்கவும்
இராவணன் போல் உருவேணும்-இராவணரால்
சாவை நகர் சொபை போச்சு- சோடைபோச்சு
கட்டினோம் பார்க்கமுதல் பெயர்ந்திட்டோம்
கொத்தினோம் போடமுதல் போய்விட்டோம்
நட்டுவைத்தோம் பிடுங்கமுதல் பித்தர்களானோம்
வெட்டினோம் சூடடிக்கமுன் வெளிக்கிட்டோம்
இனிமீள்வ தெப்போ- எம்மண்ணைக்காணப்
போவதெப்போ-யாரறிவார்?

நன்றி
D. மீரா
பசுந்தோகை 2000-2001

0 comments: