Monday, November 24, 2008

13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் - கிழக்கு முதல்வர்

இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தபிரகாரம் தீர்வுகாணவேண்டும் என்று அடிக்கடி வலைப்பதிவு பின்னூட்டங்களில் புலம்பிதீர்க்கும் ஒரு சிலருக்கு..........

13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர்

[25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை]

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா��
�் கிழக்கு மாகாணசபையின் முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்).
அரசுத் தரப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு, அரசுத் தரப்புப் படைகளின் துணைக்குழுவாகத் தமது ஆளணியினரை இயக்கி, அரசுத் தலைமையின் தீர்மானத்துக்கு அமைய கிழக்கு மாகாண முதல்வரானவர் பிள்ளையான்.
அவரே, தமது நிலையை - தமது முதலமைச்சர் பதவிக்கான அதிகார மட்டத்தை - மனம் புழுங்கி, வெதும்பி, அம்பலப்படுத்த வேண்டிய அளவுக்கு நிலைவரம் வந்துவிட்டது.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப்புக்கு நியாயமான - நீதியான - தீர்வை அளிப்பதோ அல்லது அதிகாரத்தைப் பகிர்ந்து, உரிமைகளைத் தமிழர்களுக்கு வழங்குவதோ பௌத்த, சிங்கள மேலாண்மைப் போக்கில் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கைத் தரப்பின் திட்டம் அல்ல.
மாறாக, தமது கைவிடமுடியாத வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களின், போராட்ட சக்தியாகவும் பலமாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை அடியோடு அழித்தொழித்து, தமிழரின் பேரம் பேசும் வலுவைச் சிதைத்து, அவர்களைத் தங்களது நிரந்தர அடிமைகளாக்குவது ஒன்றே தென்னிலங்கையின் மேலாதிக்கப் பண்பியல்பில் அமைந்த தந்திரோபாயத் திட்டமாகும்.
இந்தப் பின்புலத்திலேயே தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தத்தை அது ஏவிவிட்டு, போர்வெறி கொண்டு அலைகிறது.
அதேநேரம், தனது இந்த மேலாதிக்க வெறிப் போக்கை மூடி மறைத்து, இனப்பிரச்சினைக்கு நியாயத்தீர்வு காணும் தாராள மனப் போக்குத் தனக்கு இருக்கின்றது என்பதைச் சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காக அது நடிக்கவும் பின்நிற்பதில்லை.
போர்ச் சன்னதம் மூலம் தான் ஆக்கிரமித்த கிழக்கில், ஒரு தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி, ஒரு பொம்மை ஆட்சியை அங்கு நிறுவி, அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதாக அது வேடமிட்டது இந்த அடிப்படையில்தான்.
அதற்கு முன்னோட்டமாகத் தனது ஆட்சிக்கட்டில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளைக் கொண்டு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் என்ற பித்தலாட்டத்தை அரங்கேற்றி, அதன்மூலம் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தையும் கண்கட்டு வித்தைச் செயற்பாடாக மேற்கொள்ள வைத்தது அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, பின்னர் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, குப்பைக்குள் வீசப்பட்டுக் கிடந்ததுதான் இந்த அரசமைப்பின் 13 ஆவது திருத்தமும் அதன் கீழான அதிகாரப் பரவலாக்கமுமாகும்.
அரசமைப்பில் சட்டரீதியாகச் சேர்க்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலைக் கூடத் தமிழர்களுக்கு வழங்குவதற்கு சிங்களம் தயாராக இல்லை என்பதையே இருபது வருடங்களாக அதை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து வரும் தென்னிலங்கையின் இந்தப் போக்கு அப்பட்டமாக அம்பலப்படுத்தி நிற்கிறது.
இந்த அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு சகல சட்ட, நியாய அதிகாரங்களும் உண்டு. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தாம் விரும்பினால் - அதற்கு மனம் இருந்தால் - தம் பாட்டிலேயே அதை நடைமுறைப்படுத்தலாம். அதற்கு யாரின் அனுமதியையோ, இசைவையோ பெற அவர் காத்திருக்க வேண்டியதில்லை.
ஆனால், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவைக் கூட்டி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் விடயத்தை ஒரு தீர்மானமாக அங்கு நிறைவேற்றச்செய்து ஒரு நாடகம் ஆடினார். அதன் மூலம் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் காதில் அவர் பூச்சுற்றினார்.
அந்தக் கதைக்கு எடுபட்ட இந்தியா "அதிகாரப் பரவலாக்கல் நோக்கிய திசையில் இது ஒரு முதல் அடி" - என்று அந்த நடவடிக்கைக்குப் புகழாரம் சூட்டி, புளகாங்கிதம் அடைந்தது.
அப்போதே, இது ஏமாற்று நாடகம் என இந்தியாவுக்குச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்த நாடகத்தில் முக்கிய பங்குதாரர் பாத்திரம் ஏற்று நடித்திருந்த பிள்ளையான் இப்போது முதலமைச்சர் கதிரையில் அமர்ந்துகொண்டு உண்மை நிலைமையை அம்பலப்படுத்துகின்றார்.
"கிழக்கு மாகாணசபைக்கு சிறிதளவேனும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட - பகிரப்பட்ட - அதிகாரங்களைக் கூடக் கையாளும் நிலை எனக்குக் கிடையாது." - என்பதைப் பிள்ளையான் இப்போது பகிரங்கமாகவே போட்டுடைத்திருக்கின்றார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் அதிகாரத்தைத் தமிழருக்குப் பகிரப்போகிறார் எனக் கயிறுவிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய இந்தியாவுக்கு, பிள்ளையான் மனம் புழுங்கி இப்போது வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துகள் சமர்ப்பணம்.

www.uthayan.com




அடிக்குறிப்பு: நித்திரை கொள்ளுறவனை தட்டி எழுப்பலாம் ஆனா நித்திரை கொள்ளுற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது